சிறப்பு அர்ச்சாமூர்த்திகள் : அஷ்டபுஜ நரசிம்மன், கருடன் அமர்ந்தநிலை, பச்சைவண்ணன் பவழவண்ணன்
பூஜை: ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்மசம்ஹிதை பிரகாரம்
சேஷத்ரம்: சௌந்தராரண்யம்
விமானம்: பத்ரகோடி விமானம்
புஷ்கரணி: சாரபுஷ்கரணி – சௌந்தர்ய புஷ்கரணி
ஸ்தலவிருட்ஷம் : மாமரம்
கிருதயுகம் : துருவன் / ஆதிசேஷன் பிரத்யத்க்ஷம்
திரேதாயுகம்: பூமிதேவி பிரத்யத்க்ஷம்
த்வாபரயுகம் : மார்க்கண்டமகரிஷ பிரத்யத்க்ஷம்
கலியுகம்: சாலிசுகன் – நாகராஜன் பிரத்யத்க்ஷம்
திருநாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு:
மனிதராய்ப் பிறந்தார் அனைவரும் திருமாலுக்கு அடிமை செய்து தீவினையை நீக்க முயல வேண்டும். அதற்கு இடமாய் இருப்பது அப்பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களாகும். இறைவன் காற்றாகவும், கனலாகவும், நீராகவும், நிலனாகவும் உருக்காண ஒண்ணாது இயற்கையோடு இயைந்து நின்றால் அடியவர்களால் காண முடியாதென திரு இந்தளூரில் நம்மனோர் கட்புலன் காண தமர் உகந்த வடிவத்தில் காட்சி தருகிறேன் என்று திருமங்கை மன்னர் பாடியுள்ளார். எனவே, இறைவன் அடியவர் பொருட்டே திருக்கோவில்களில் திருமேனி கொண்டு எழுந்தருளியுள்ளான் என்பது விளங்கும். திருக்கோவில்களில் எழுந்தருளியுள்ள இந்நிலையை அர்ச்சாவதாரம் என்பர். இது இறைவனுக்குரிய ஐவகை நிலைகளில் ஒன்றாகும். இறைவனுடைய அழகும் குணங்களும் இவ்வடிவத்தில்தான் ஒளி விடுகின்றன. உயிரினங்கள் உய்ந்தால் அன்றி இவ்விடம் வட்டு புடைபெயரேன் என்ற உறுதியோடு நின்றும், இருந்தும் கிடந்தும் நம்மை வாழ்விக்க இந்நில உலகில் தோன்றிய திருமேனியே அர்ச்சையாகும். இத்தகைய அர்ச்சாவதார எம்பெருமான்களை ஆழ்வார்கள் என்ற அடியவர் பெருமக்கள் அந்தமிழ் இன்பப் பாக்களால் பாடியுள்ளார்கள்.
அத்தகைய பாடல்கள் அடங்கிய பதிகங்கள் பெற்ற திருக்கோவில் உள்ள திருஊர்களை திவ்யதேசங்கள்என்று அழைப்பர்
திவ்ய தேசங்கள் நூற்றெட்டு ஆகும்
இதில் சோழ நாட்டில் உள்ளவை நாற்பது தலங்கள் ஆகும்.
நலம்பல நிறைந்த சோழ வளநாட்டில் உள்ள நாற்பது திருப்பதிகளில் நாகப்பட்டினம் ஒன்றாகும்.இவ்வூர் (தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் தஞ்சைக்கு கிழக்கே நாற்பது கல் தொலைவில் கடற்துறையில் அமையப் பெற்றுள்ளது நாகப்பட்டினம் வட்டத்தின் தலைநகரம் நாகை வட்டத்தில் இரண்டு திவ்ய தேசங்கள் உண்டு) ஒன்று திருக்கண்ணங்குடி மற்றது நாகப்பட்டினமாகும். இதை திருநாகை என்ற மரூஉப் பெயரால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அழைப்பர். இவ்வூரில் திருமால் ஸ்ரீ சௌந்தரராஜன் என்ற திருநாமத்துடன் பத்திரகோடி என்னும் விமானத்தில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு எழுந்தருளி உள்ளான் இப்பெருமான் உறையும் புகைவண்டி இத்திருக்கோயில் நாகப்பட்டினம் நிலையத்திலிருந்து மேற்கே இரண்டு பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. நகரின் மேற்பால் இக்கோயில் கிழக்கு நோக்கி நிலை பெற்றுள்ளது. கோயிலின் முகப்பில் ஒரு நாற்கால் மண்டபமும், அதனை அடுத்து தொண்ணூறு அடி உயரமுள்ள எழுநிலை கோபுரமும், விளங்க நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் கூடியுள்ளது. மேற்புறமதிளில் சிறு கோபுரத்துடன் கூடிய மேற்கு நோக்கிய வாயில் ஒன்று உள்ளது. மதில்களைச் சூழ நான்கு மாட வீதிகளும், இராஜ கோபுர வாயிலுக்கு நேரே நீண்டதொரு சன்னதித் தெருவும், ஓடும் பெரிய வீதிகளும் நாற்புறமும் தேர் பொருந்தியுள்ளன. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் மீது ஆழ்வார் பன்னிருவரில் ஒருவரான திருமங்கை மன்னர் அகத்துறைப் பாடல்களால் ஆனபதிகம் ஒன்று பாடியுள்ளார். ஒரு பாட்டில் பெருமாளை வெஞ்சினவேழ மருப்பொசித்த வேந்தர் என்று கண்ணன் எம்பெருமானாகக் கண்டுருகிக் கூறியுள்ளார்.
எனவே, அன்பர்கள் இத்திருக்கோவிலின் மேலமாட வீதியின் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியவாறு கண்ணன் எம்பெருமானை எழுந்தருளுவித்து கோயில் அமைத்தனரோ என்று நினைக்குமாறு ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில் இருக்கின்றது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மூலவர் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ஆவர். இக்கோவிலுக்கு இடது புறத்தில் தெற்கு மாட வீதியின் மேற்கோடி மதிளைஒட்டி தெற்கு நோக்கிய வசந்த மண்டபம் ஒன்று உள்ளது. இதில் ஸ்ரீ கண்ணன் எழுந்தருளி சிறப்பு வழிபாடுகள் கண்டருள்வார். கீழ மாட வீதியில் ஸ்ரீ தேசிகர் கோவிலும் சன்னதி தெருவின் வடசிறகில் தெற்கு பார்த்த திருக்கோயிலாக ஸ்ரீ அனுமார் கோவிலும் உள்ளன. அதே சிறகில் ஓட்டு வில்லைகளால் வேயப்பெற்ற கோரதத்துடன் கூடிய கட்டிடமும் உள்ளன. தேர் ஓடும் வீதிகளில் ஒன்றான தெற்கு வீதியின் மேல் கோடியில் அங்காள பரமேஸ்வரி கோயிலும் கீழ மாட வீதியை ஒட்டி வடக்கு வீதியின் வடசிறகில் தேர்நிலை மண்டபமும்,தேரும் அவ்வீதியின் கீழ்கோடியில் கன்னிகா பரமேஸ்வரி கோயிலும், அதனை அடுத்து கோவிலின் திருக்குளமாகிய சாரபுஷ்கரணி தீர்த்தமும் அமையப் பெற்றுள்ளன.கீழவீதியில் மூலையில் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலும் அதே வீதியின் தென் கோடியில் உள்ள கிறிஸ்தவர் கோவில் வெளிமதில் சுவற்றை ஒட்டி பவழக்காளி அம்மன் கோயிலும் உள்ளன. பராசக்தியின் அம்சமாகிய இத்தேவிகள் கோஷ்ட தெய்வங்களாக தேர்ஓடும் வீதிகளில் திகழ இருப்பது திருமால் கண்ணனாக அவதாரம் செய்தபோது அவனுடன் தோன்றி மறைந்த யோகமாயையாகிய சக்தி தெய்வத்தை நினைவூட்டிக் கொண்டு இருப்பன போன்று உள்ளன. முன்னாளில் நடைபெற்ற ஆண்டு விழாக் காலங்களில் சிலநாள் விழாக்கள் வீதிகளில் ஆங்காங்கு உள்ள ஒரு சில மண்டபங்களிலிருந்து நடைபெறுவதுண்டு. தற்போது அம்மண்டபங்கள் நன்னிலையில் இல்லாததால் அவற்றிலிருந்து விழாக்கள் நடைபெறுவதில்லை. இனி இத்திருக்கோயிலின் மேல வீதிக்கு மேற்புரம் உள்ள கோட்டை வாயில் தெருவைக் கடந்து மேற்கே சென்றால் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் நதி தேவநதி என்ற பெயருடன் ஓடுகின்றது. அவ்வாறு ஊரின் தென்மேற்கு திசையில் தெற்கு வடக்காக ஓடி பின் கிழக்கே கடலை நோக்கிச் செல்லும்.காவிரியின் கிளை ஆறாகிய ஓடம்போக்கி என்று ஆற்றுடன் கூடுகிறது. உத்தரவாகினியாகச் செல்லும் இவ் ஓடம்போக்கி ஆற்றை விருத்த காவிரி என்று கூறுவர். இதனால் பெருமாளை திருத்தகுவிருத்த காவிரித் துறைவன் என்று போற்றுவர். இவ்விருத்த காவிரிக்கருகே சற்று தெற்கே ஓடி கடலை அடையும் கடுவையாற்றுடன் விருத்த காவிரி கிழக்கே கலந்து பின் இரண்டும் ஒன்றாகி கடலில் கலக்கின்றன. இவ்வாறு செல்லும் ஆற்று வெளிகள் யாவும் பள்ளமும், உப்பு நீர் கசிவும் கொண்டு முள்ளிச் செடிகள் மலிந்து சதுப்புநிலமாக காணப்படுகின்றன. இந்நீர் சூழ்ந்த அளங்கள் கோவிலின் தெற்கே சில பர்லாங் தொலைவில் உள்ளன. பர்லாங் தொலைவில் கடல் உள்ளது. கிழக்கே மூன்று கடல், ஆறு, குளம் ஆகிய மூன்று பல நெடுந்தெருக்களும், குறுந்தெருக்களும் அமைய அவற்றில் வீடுகள் பல கட்டி கொண்டு மக்கள் நெருங்கி வாழ்கின்றனர்.வடக்கே ஊர் விரிந்து சென்று சிவனார் கோவில்களை நிரம்பப் பெற்று சிவராஜதானி எனப் பெறுகின்றது. எனவே, ஊரின் தென்பகுதி இயற்கைச் சூழலும், இடச் சிறப்பும் மிகுந்து ஸ்ரீ வைணவ திருவினுக்கு ஒர் உறைவிடமாக இருத்தலால் ஸ்ரீ வைணவர்கள் இதனை அழகிய நாகை என்ற பொருளில் தென்நாகை என்று கூறுவர். எனவே, நன்னாவலர் புகழும் இத்தென்நாகையில் உள்ள திருமால் கோவில் புராணப் பழமை பெற்றது. இதன் மகாத்மியம் பதிணென் புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராண உத்தரகாண்ட ஞானயோக பாதத்தில் உள்ள சௌந்தராரண்ய மகிமை என்ற பகுதியில் பேசப்படுகிறது. இச்செய்திகள் அனைத்தும் நைமிசவனத்தில் உள்ள சூதபௌராணிகர் என்ற பெரியார் சௌனகர் போன்ற தனது மாணவர்களை பார்த்துக் கூறியதாக உள்ளன. இப்புராண விரிவுகள் அண்டகோளச் சுருக்கம், துருவன் தபஸ் சித்தி, மார்க்கண்ட பகவத் சம்வாதம், கௌரி சாரபுஷ்கரணி வைபவம் பகவத்தர்சனம் பிரம்ம ஸ்துதி, சௌந்தர்யப் பிராப்தி, கண்ட சுகண்டோ பாக்கியானம், பகவதாவிர்பவம் சாலீசுக மகாராஜசரிதம் ஆகிய பத்து
அத்யாயங்களாக உள்ளன.
கண்றெறிந்த தோளான் கனைகழலை காண்பதற்கு நன்கறிந்த இந்நாவலம் சூழ்நாட்டில் சித்திக்கொரு விதையாகிய தென் திசையில் சேண்நாட்டினும் உயர்ந்த இச்சோழ மண்டலத்தில், கங்கையிற் புனிதமாய பொங்குநீர் காவிரியின் தென்கரையில் தொடங்கி திருமறைக்காடு வரை தென் வடலாக கிழக்கு மேற்கில் ஐம்பது யோசனை அளவுக்கு பரந்துபட்ட காடு ஒன்று இருந்தது. இதில் ஐந்து யோசனை அளவுக்கு உள்ள பகுதியைகிருஷ்ணக்ஷேத்திரம் என்று கூறுவர். இப்புனித இடத்தின் கீழ்பால் சவுந்தர ஆரண்யம் என்ற பெருவனம் ஐந்து கல் அளவுக்கு பரவியிருந்து. எனவே, இன்றைய நாகையம்பதி முன் ஒரு காலத்தில் சந்ததம் புகழும், சுந்தராரண்யம் என்ற காட்டின் இடையே எழுந்ததாகும். இக்காட்டின் தெய்வத் தன்மையை நாரதர் வாயிலாகக் கேட்ட துருவன் என்ற அரசிளங்குமரன் இவ்வனம் புகுந்து திருமாலை நோக்கி கடுந்தவமியற்றினான். சிறுவனின் மனஉறுதி கண்ட பெருமாள் பெரிய திருவடிமேல் எழுந்தருளி வந்து அருங்காட்சி நல்கி உயர்வானில் பெரும் பதம் அளித்துச் சென்றான். பீதக ஆடைப்பிரானர் துருவனுக்கு அருளொடு பெரும் பதம் அளித்துச் சென்றதை அறிந்த மார்க்கண்டன் என்ற முனி மகன் இவ்வனம் பெரும் பேறு பெற்றான்.
அலைகடல் துறையில் அமைந்துள்ள இவ்வனத்தில் மலைமகள் தங்கி தவமியற்றி திருமால் அருளால் பேரழகு பெற்றாள். செந்தண்மை இல்லா அந்தண உடன் பிறப்பினரான கண்டன், சுகண்டன் என்ற இருவர் இவ்வனத்தில் உள்ள சாரபுஷ்கரணியில் தங்கள் முடை உடலை நனைத்து வைகுந்தத்தில் இருக்க இடம் பெற்றனர். சாரபுஷ்கரணி என்ற திருக்குளம் படிந்தவர்களது, பாவங்களை போக்குவதோடன்றி உடலையும், உள்ளத்தையும், தூய்மை பெறச்செய்யவல்லது. இக்குளத்தின் கரையில் தானம் கொடுத்தவனும், அதை வாங்கியவனும் இறுதியில் சூரிய போதித்துக் கொண்டு அர்ச்சிராதி மண்டலத்தை போதித்துக் மார்க்கமாக வைகுந்தம் போய் பேரானந்தம் அடைவர். இத்திருக்குளம் வடக்கு வீதியின் வடசிறகில் தெருவின் கீழ்கோடியில் அமைந்துள்ளது. சுற்றுச்சுவர்கள், நாற்புறமும் படிக்கட்டுகள், நீராழி மண்டபம் ஆகியவற்றோடு இருந்த இக்குளம் தற்போது நன்னிலையில் இல்லாது காணப்படுவது வருந்ததற்குரியது. இத்திருக்குள வரலாறு அடியேன் எழுதிய சாரபுஷ்கரணி வைபவம் என்ற சிறு நூலால் அறியலாம். சவுந்தரவனச் சிறப்பையும், சாரபுஷ்கரணியின் பெருமையும் அறிந்த நான்முகக் கடவுளும் மாநில மடந்தையும், மாதொரு பாகனும், நாகர் வேந்தனும் இவ்வனம் புகுந்து நாளும் விதியால் நாரணனைப் பரவலாயினர். இவர்களது பூசனைக்குகந்த புண்ணியன் கிருதயுக தொடக்கத்தில் சித்திரைத் திங்கள் புர்வ பச்ச துவாதசி திதியில் சகம்புகழ் விண்மீன் மகம் நிலவிய நன்னாளில் சவுந்தர வனத்தின் நடுவில் உள்ள சாரபுஷ்கரணிக் கரையில் திருஅவதாரம் செய்தார். அர்ச்சாவதாரமாய் உள்ள அத்திருமேனியை எத்திசையும் புகழ பத்திரகோடி என்ற விமானத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலமாக நின்ற கோலத்தில் எழுந்தருளச் செய்தனர். அழகு வனத்தில் எழுந்தருளிய அவ்அரவணைச் செல்வனுக்கு அன்று தொட்டு அழகியான் என்ற திருப்பெயர் உண்டாயிற்று. சௌந்தர ஆரண்யம் என்ற காட்டில் உறைந்தருளுபவன் ஆனதால் சௌந்தரராஜன் என்ற திருப்பெயர் மூவுகலகிலும் விளங்கலாயிற்று என்பர். அப்பெருமானது நெஞ்சம் விட்டகலாத கஞ்ச மலர்ச் செல்வியாம் உலகன்னைக்கு சௌந்தரவல்லி என்ற திருப்பெயர் அமைந்தது. ஒழிவில் காலமெல்லாம் அழகியானுக்கு வழுவிலா அடிமை செய்யும் நாகவேந்தனை அனந்தாழ்வான் பாஞ்சராத்ர ஆகமவிதிப்படி அஷ்டாங்க விதான முறையால் அப்பெருமானை ஆராதித்ததால் அவ்வனத்தில் உள்ள தலம் அது முதல் நாகன் பட்டினம் நாகப்பட்டினம் எனப் பெயர் பெற்றது.இவ்வாறு தேவர்கள் அனைவரும் ஒவ்வொறு யுகங்களிலும் பாஞ்சராத்ர ஆகம விதிப்படி வழிபாடு செய்து வரம் பல பெற்றனர்.
அடியார்களது அரத்தை கெடுத்து வரம் தரும் பெருமாளான அழகியானைக் கலியுக தொடக்கத்தில் சாலீசுகன் என்னும் சோழ மன்னன் வழிபட்டுவந்தான். ஓர் நாள் அம்மன்னன் அவ்வனத்தில் உள்ள நிலத்தில் பொருந்திய சுருங்கை வழியே வந்து போகும் பேரழகியான மும்முலைகளோடு கூடிய நாகர் மகளைக் கண்டு காதல் கொண்டான். கண்ட போதில் அவளது மூன்றாவது தனம் மறைந்தது. அவளும் அவன் பால் நேயமுற்றாள். காதலர் நிலை அறிந்த மாதவன் அவ்விருவரையும் கூட்டுவித்து மணப்பேறும், மக்கட்பேறும் கிடைக்கச் செய்தார். இச்சோழனை பிலமதனில் புக்குபேர் ஒளியால் நாகர் குலமகளைக் கைபிடித்த கோமான் என்று தமிழ்நூல்கள் பாராட்டுகின்றன. இவ்வாறு இறைவன் அருளால் மனைவாழ்க்கையும், மக்கட்பேறும் பெற்ற சாலீசுக மன்னன் பெருமான் எழுந்தருளிய கோயிலுக்குப் பணிகள் பல செய்து பங்குனி மாத வளர்பிறைப் பட்சம் சப்தமி திதி வெள்ளிக்கிழமை ரோகிணி விண்மீன் நன்னாளில் சிறப்புறு பூசனை என்கிற பிரம்மோத்சவத்தைத் தொடங்கி வைததார்.
ஒன்பது நாளும் உயர் சிறப்பொடு விழா அயர்ந்து இறுதியில் பாவம் போக்கி பேரின்பம் அளிக்கும் நீராட்டு என்ற அவபிருத நீராடலை கடற்றுறையில் நடத்தி வைத்தார்.இச்சாலீக சோழன் மகனை துந்துமான் என்ற புராணம் கூறும் இவனைத் தொண்டைமான் என்ற தமிழ் நூல்கள் கூறுகின்றன. இவ்வரலாற்றை பெரும்பாணாற்றுப்படை என்ற சங்க நூலுக்கு நச்சினார்கினியர் எழுதிய உரை பகுதியால் அறியலாம். இவ்வாறு பெருமான் கிருதயுகத்தில் ஆதிசேடனாலும் திரேதாயுகத்தில் நில மகளாலும், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயராலும், கலியுகத்தில் சாலீசுக சோழ மன்னனாலும் வழிபடப் பெற்றுள்ளார்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டினரான திருமங்கையாழ்வார் அர்ச்சா சமாதியில் சேவை தரும் எம்பெருமானைக் கண்டு வழிபட நாகை வந்தார். நின்ற கோலத்தில் உள்ள கருமாணிக்க கள்வனிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தார். தான் ஒரு தலைவி நிலையை அடைந்து தலைமகனாகிய பெருமானிடம் காதல் பூண்டார். அக்காமநோய் பலவாறு தன்னை நலிய அதனால் அப்பெருமானை உருவெளிப்பாட்டில் கண்டு மயங்கிக் கூறியதாக அகத்துறை பாசுரங்கள் அமைந்த பதிகம் ஒன்று அருளியுள்ளார். இவ்வாறு புராணச் சிறப்பும், பாடற் சிறப்பும் பெற்றுள்ளதை உணர்ந்த அரசர்களும் அவரனைய பெருமக்களும் அழகியார் திருக்கோவிலுக்கு பணிகள் பல செய்ய முன் வந்தனர். அவர்களின் வரலாற்று காலத் தமிழ் மன்னர்களான நாகர், சோழர், பல்லவர்களை முதற்கண் கொள்ளலாம். பின்னர் தஞ்சையையாண்ட நாயக்க மராட்டிய மன்னர்களைக் கூறலாம். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் ஒருவர் பெருமாளுக்கு திருவாபரணம் ஒன்று நன்கொடையாகத் தந்துள்ளார் எனத் தெரிகின்றது. நாயக்க மராட்டிய மன்னர்களது ஆட்சியில் அவர்களது ஆட்சித் தலைவர்கள்
இக்கோயிலுக்கு பணிகள் பல செய்துள்ளனர். நாயக்க மன்னர்களது ஆட்சியிலும், மராட்டிய ஆட்சியிலும் மன்னர்களது நாகையையும் அதைச் சார்ந்த சிற்றூர்களையும் அன்னிய வாணிப கும்பினியார்களான போர்த்துகீசியர், டச்சுகாரர்களுக்கு வாணிபம் செய்து கொள்ள உரிமைகள் அளிக்கப் பெற்று இருந்தன. அதில் டச்சுக்காரர்களே நிலையாகத் தங்கி அவ்உரிமைகளைப் பெற்று கோட்டை கொத்தளங்கள் கட்டிக் கொண்டு ஆண்டு அனுபவித்து வந்தனர். இவ்உரிமைகள் நாயக்க மன்னரான ஏகோஜி காலத்திலும், செம்பிலும், வெள்ளித் தகட்டிலும் நம்பிக்கை சாசனம் செய்து கொடுக்கப் பெற்றதாகத் தெரிகிறது. அக்காலத்தில் டச்சுகாரர்களுக்கு வாணிப கேந்திரமாக உள்ள ஆந்திர மாநில பந்தர் மசூலிபட்டிணத்திலிருந்து 1659ல் நாகமலு மாமுடிநாயக்கர் குமாரர் ஜகுல் நாயக்கர் என்பார் நாகை வந்து டச்சு கம்பெனியாரின் ஆலோசனையாளராகவும், உயர் அதிகாரியாகவும் விளங்கி வந்தார். இவர் பரம வைணவர் பெருமாளிடம் பேரன்பு பூண்டு தொண்டு செய்ய முற்பட்டார். கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லாதிருந்தது. அரசியலாருக்கு கப்பல் போக்குவரத்துக்கு கலங்கரை விளக்கம் தேவைப்பட்டது. அது காலைவெளிவையில் உள்ள புதுவெள்ளி கோபுரம் என்கிற புத்த சைத்தியம் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாக உதவி வந்தது. அது பெரிதும் பழுதுற்ற நிலையில் இருந்ததால் அரசியலார் தங்கள் அதிகாரியான நாயக்கரிடம் பெரும் பொருள் கொடுத்து கலங்கரை விளக்கம் கட்டச்சொல்ல அவர் பெருமாள் கோவிலுக்கு எழுநிலை கோபுரம் கட்டி அதில் விளக்கேற்றி காட்டியதாக ஒரு செய்தி கூறப்படுகிறது. நாகையைச் சார்ந்த சிற்றூர்களில் உள்ள சிலமுது மக்களது வாக்கில் இன்றும் பெருமாள் கோயில் கோபுரம் கட்டியது போல என்ற ஒரு வழக்குச் சொல் பயிலப்படுவதைக் கொண்டும் அறியலாம்.
இவர் கோபுரம் மண்டபம் திருமதில் முதலான திருப்பணிகள் செய்துள்ளார். அத்துடன் பொன்அணி கலன்கள் பலவும் நன்நிலங்களும் பெருமாளுக்குத் தந்துள்ளார். இவரது உருவமும் இவர் மனைவி இலட்சுமி அம்மையாரது உருவமும் இவர் நிறுவிய மண்டபத்தில் கைகூப்பி நிற்கும் நிலையிலும், அஷ்டாங்க பஞ்சாங்க முறைப்படி இருவரும் நிலம்தோய நீள்வணக்கம் செய்யும் நிலையிலும் சிற்ப உருவங்களாக உள்ளதைக் காணலாம். 1737 தஞ்சை நாட்டு அதிகாரியான வேலூர் சேஷகிரிராயர் குமாரர் குண்டோ பண்டிதர் என்பார் அர்த்த மகா மண்டபங்களை ஒட்டி பெரிய அளவில் ஆஸ்தான மண்டபம், பச்சை வண்ணர், பவழ வண்ணர் சன்னிதிகள் வீற்றிருந்த பெருமாள், கிடந்த கோலம் பெருமாள், விஷ்வக் சேனர் முதலிய சன்னிதிகள் சன்னதிகள் தெற்கு வாசல் சோபான மண்டபம் ஆகியவற்றைக் கருங்கற்கள் கொண்டு கட்டியுள்ளார்.பிறகு பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாகை வணிகர் திராட்சா பாலகுருமூர்த்தி செட்டியார் என்பவர் நிறுவிய மண்டபம் முதலான திருப்பணிகளும் பத்திஉலா சின்னையா செட்டியின் வசந்த மண்டப திருப்பணி, வகையறா திருமடப்பள்ளி நாச்சியப்ப முதலியார் திருப்பணி முதலான அறக்கட்டளைகளும் நாகை இராமசாமிபிள்ளை என்பவரால் செய்யப் பெற்ற மூலவர் திருமேனி பிரதிட்டையும் அவ்வப்போது ஊர்ப் பொதுமக்களாலே நிகழ்த்தப் பெற்ற திருப்பணிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இக்கோவிலில் நானூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட கல்வெட்டுகள் ஒரு சிலவே உண்டு.
இக்கோயிலின் உள்ளே சில கட்டிடப் பகுதிகளையும், துணைக் கோயில்களையும் கட்டியமைக்கும், விளைபுலன்கள் தானம் செய்தமைக்கு சில சிலுகல் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசர்களாலும், செல்வர்களாலும் செய்யப்பெற்ற பொற்பணி கற்பணி அறக்கட்டளைகள் ஆகியதோடல்லாது புலவர் பெருமக்கள் சிலர் சொற்பணிகளும் செய்துள்ளனர். திருமங்கை மன்னரது மங்களாசாசனம் பதிகத்துக்குப் பிறகு திவ்யகவி பிள்ளைப்பெருமான் அய்யங்காரால் பாடப்பெற்ற நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் ஒரு பாடலும், திருக்குருகை பெருமாள் கவிராயரால் பாடப்பெற்ற நூற்றெட்டு திருப்பதி கோவை பாடல்களும், பரவை இராமனுஜர் பாதம் பணியும் குரவை இராமனுஜர் பாடிய நூற்றெட்டு திருப்பதி திருப்புகழ் பாட்டும் தோன்றியுள்ளன. எண்பது ஆண்டுகட்கு முன்னர் நாகையை சேர்ந்த வெளிப்பாளையத்தில் வாழந்த முத்துகிருஷ்ணதாசர் என்பவரால் பாடப்பெற்ற பக்தாம் மிருத மஞ்சரி என்ற தோத்திர நூலில் சில தனிப் பாடல்களும் பெருமாள் மீதும் தாயார் பேரிலும்உள்ள பஞ்சரத்தின் பதிகங்களும் உள்ளன. நாகை சுப்பராயபிள்ளை என்ற புலவர் பாடிய செளந்தரராஜ பெருமாள் தசாவதார பதிகம் என்ற நூலும் இசை மும்மணிகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதர் பெருமாள் மீது சொல்நயமும், இசைவளமும் கெழுமப் பாடிய கீர்த்தனைகளும் உள்ளன.
இக்கோவிலை திங்களும் நாளும் விழவறா தென்னாகை விண்ணகர் என்றால் அது மிகையல்ல. நித்யம், நைமித்திகம், அதாவது நாள் வழிபாடு சிறப்பு வழிபாடு என கூறப்படும் வகையில் நாள் வழிபாட்டில் ஆறுவேளைகளில் ஆறுகால பூஜை என்ற பெயரில் திருவாராதனம் நடைபெறுகிறது. மற்றபடி வார, பட்ச, வருஷ விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதுண்டு. வருஷ முதல் மாதமாகிய சித்திரையிலிருந்து முறையாக நடைபெறும் விழாக்களைப் பார்ப்போம். வருஷப்பிறப்பு சித்திரை முதல் நாள் அன்று பஞ்சாங்கம் படித்தல், பெருமாள் மாடவீதிக்கு எழுந்தருளல் நடைபெறும். அட்சய திருதியை அன்று பெருமான் பெரிய திருவடியில் எழுந்தருளி உதய கருட சேவையாக வீதி வலம் வருவார். நட்சத்திரத்தன்று பெரிய திருவடியில் எழுந்தருளி துருவனுக்கு காட்சி தந்து உதய கருடாருடனாக வீதிவலம் வருவார். வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி முதல் வசந்த விழா தொடங்கி ஸ்ரீ பெருமான் திருச்சுற்று வலம் வந்து ஸ்ரீ தாயார் சன்னிதிக்கு எதிரே உள்ள சிற்ப அழகுடன் கூடிய நாற் கால் மண்டபத்தில் ஆஸ்தானம் இருப்பார். அதுபோது விசாக நாளும் வருவதால் ஸ்ரீ நம்மாழ்வார் விழா ஐந்து நாட்கள் சேவை சாற்றுமுறையுடன் நடைபெறும் ஆனிமாதம் தனிக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சௌந்தரவல்லித் தாயாருக்கு ஆண்டுவிழா திருக்கொடியேற்றி பத்து நாட்கள் இரு வேளைகளிலும் பல்லக்கிலும், வாகனங்களிலும் பெரிய திருச்சுற்றில் ஸ்ரீ தாயார் வலம் வருவார். உத்தர நாளில் தேர்விழா நடைபெறும். விழா முடிந்த மறுநாள் ஸ்ரீ தாயார் சன்னதிக்கு ஸ்ரீ பெருமாள் எழுந்தருளி திருக்கல்யாண விழா கண்டருள்வார். ஆடி மாதம் தட்சிணாயன மாதப்பிறப்பு ஸ்ரீ ஸ்ரீ பெருமாள் புறப்பாடு ஸ்ரீ ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருக்கொடி ஏறி பத்து நாட்கள் வரை மாலை வேளையில் மட்டும் வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். ஆடிப்பூரத்தன்று ஸ்ரீ பெருமாளும், ஆண்டாளும் கோரதத்தில் வீதிக்கு எழுந்தருளுவர். ஆடி மாத வளர்பிறை ஏகாதசியன்று உத்ஸவர் கவசம் களைத்து திருமேனி திருமஞ்சனம் நடைபெறும். ஆவணி மாதம் ஸ்ரீ ஜெயந்தி கண்ணன் பிறப்பு. ஸ்ரீ சந்தான கிருஷ்ணனை தொட்டிலிடுவர். உரியடி விழா. ஸ்ரீ பெருமான் வீதிக்கு எழுந்தருளுவார்.
புரட்டாசி மாதம்சனிக்கிழமைகளில் பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரங்களோடு சேவை தந்து அருளுவார். நவராத்திரி விழாவின் போது ஸ்ரீ தாயார் ஒன்பது நாட்கள் நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு திருவாராதனங்கள் கண்டருள்வார். விஜயதசமி அன்று ஸ்ரீ பெருமான் குதிரை நம்பிரான மேல் எழுந்தருளி, அம்பு போட்டு வருவார். பெரிய திருவோணத்தன்று மேலத் திருச்சுற்றில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் ஆகி மாடவீதிக்கு எழுந்தருளுவார். அகண்ட தீபமேற்றி ஆலத்தி எடுத்து கம்பத்தில் வைத்து தீப வழிபாடு செய்வர்.ஸ்ரீ பெருமான் தங்கக் கவசம் சாத்திக் கொள்ளும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். கடைசி சனிக்கிழமை பெரிய பெருமாள் திருமஞ்சனம் நடைபெறும்.
ஐப்பசி மாதம் ஸ்ரீ மணிவாள மாமுனிகள் விழா பத்து நாட்கள் நடைபெறும்.பத்தாம் நாள் ஐப்பசி மூலத்தன்று ஸ்ரீ பெருமான் ஆழ்வார்கள் சன்னதிக்கு எழுந்தருளி ஸ்ரீ மணவாள மாமுனிகளுடன் வீதிக்கு எழுந்தருளுவார். பின் சேவை சாத்துமுறை நடைபெறும். ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகையன்று ஸ்ரீ பெருமாளுக்கு திருமஞ்சனமாகி பீதாம்பரம் அணிவிப்பர்.
கார்த்திகை மாதம் வளர்பிறை நவமியில் திருப்பவித்திர விழா தொடங்கி பௌர்ணமியின் சாத்துமுறை நடக்கும். அன்று காலை ஸ்ரீ பெருமான் பெரிய திருவடி மேல் எழுந்தருளி உதய கருட சேவையாக திருவீதி வருவார். சௌந்தர்ய புஷ்கரணியில் நீராட்டு விழா நடைபெறும். திருக்கார்த்திகை அன்று திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர விழா ஐந்து நாட்கள் மங்களாசாசனம் சேவை சாத்துமுறை நடைபெறும். கௌசிக துவாதசி, கௌசிக புராணம் வாசித்தல், கார்த்திகை தீப விழா ஸ்ரீ பெருமாள் திருவீதிக்கு எழுந்தருளுவார்.
மார்கழி மாதம் தனுர் மாத பூஜை பகல் – பத்துவிழா பத்து நாட்கள் மோகனாவதாரம். திருமங்கை மன்னன் திருவடி தொழுதல் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பரமபதவாசல் திறப்பு விழா நடைபெறும். இராப்பத்து விழா பத்து நாட்கள் ஸ்ரீ பெருமாள் திரு உண்ணாழி வலம் வருதல், ஏகாந்த சேவை, கஜேந்திர மோட்சம் நம்மாழ்வார் திருவடித்தொழுதல் சேவை. சாத்து மறையுடன் விழா இனிது முடியும்.
கூடாரை வெல்லும் திருப்பாவை நாள் பாட்டு விழா அன்று ஸ்ரீ பெருமான்தாயார் ஸ்ரீ தேவி பூமிதேவி ஆண்டாளுடன் ஏக சிம்மாசனத்தில் கூடி இருந்து சேர்த்தி சேவை நடைபெறும். சாத்துமறை அனுமத் ஜெயந்தி விழா, திருப்பாவை ஆகியவற்றோடு மார்கழி மாத விழாக்கள் இனிது முடியும்.
தைமாதம் உத்தராயண புண்யகாலம் ஸ்ரீ பெருமான் எழுந்தருளல்.
ஸ்ரீ தாயார் புஷ்கரணிக் கரையில் கனுப்புடி வைத்தல். பிறகு சேர்த்தியில் கனுசேவை விழா.
ஸ்ரீ தாயார் அத்யயன விழா தொடக்கம்
தை அமாவாசையன்று சாத்துமுறை
ஸ்ரீ பெருமாளுக்கு நாச்சியார் கோலம்
ஸ்ரீ தாயாருக்கு ஆண்கோலம் புறப்பாடு
மறுநாள் மட்டையடி விழா பிரணயகலக உத்ஸவம் பெருமாள் வீதிக்கு எழுந்தருளல். இரவு ஸ்ரீ பெருமான் தாயார் சன்னதியில் சேர்த்தி சேவை.
மாசி மாதம் மகத்தன்று மாசிக்கடலாட்டு விழா நடைபெறும்.
பங்குனி மாதம் ஸ்ரீ பெருமாளுக்கு பங்குனிப் பெருவிழாவான ஆண்டு விழா நடைபெறும். திருக்கொடி ஏறி பத்து நாட்கள் வரை காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் பெரிய வாகனங்களிலும் திருவீதி உலா நடைபெறும்
ஏழாம் நாள் விழா சிறப்பு திருவிழாவாகும். மலர்களில் சிறந்தது சாதி மலர் என்றும், கடவுளர்களில் சிறந்தவர் காக்கும் இயல்பினனான கண்ணபிரான் என்றும் ஓர் வடமொழி சுலோகம் கூறும். அம்முறைப்படி ஏழாம் நாள் மாலை சூர்ண உத்ஸவமாகி இரவு ஸ்ரீ பெருமாளுக்கு சாதிமலர்களால் ஆன ஒற்றைமாலை மட்டும் அணிவித்து தாமரை மலர்களால் வேயப்பெற்ற திருவாசிகையில் எழுந்தருளப்பண்ணி வீதி உலா நடத்துவர்.
இத்தகைய திருவாசிகை விழா நாகைளில் மட்டுமின்றி திருகண்ணங்குடி, திருக்கண்ணபுரம் ஆகிய இரு தீவ்ய தேசங்களிலும் ஏழாம் நாள் விழாவாக பெரிய திருவாசி புறப்பாடு நடைபெறுகிறது. அத்தலங்களில் திருவாசிப் புறப்பாடு நடந்து முடித்த பிறகு பெருமாளுக்கு தோடுகொண்ட மாலை, தியாகபரி வட்டங்கள் சாத்தி சிவமூர்த்தி கோலம் பண்ணி ஆடும் தியாகர் போல ஆட்டமிட்டுக் கொண்டு பெருமாளை எழுந்தருளப் பண்ணுவர்.
அதுபோது சுத்தமத்தளம், எக்காளம், திருச்சின்னம், தாளம் ஆகியவற்றை முழக்குவர்.
அத்யாபகர்கள் பெரிய திருமடல் சிறிய திருமடல் ஆகிய பிரபந்தங்களை சேவிப்பர். ஆனால், திருநாகையில் இத்தகைய விழா நடைபெறுவதில்லை.
9-ம் திருநாள் காலை திருத்தேர் விழா நடைபெறும்
இக்கோயிலுக்குரிய தேர் எங்கும் உள்ளது போல கீழ வீதியில் இல்லாதது கவனத்திற்குரியது. ஆனால் தேர் கீழ மாடவீதி வடகோடியில் வடக்கு வீதியின் வடசிறகில் இருக்கிறது. இதற்குக் காரணம் தேர்விழா அன்று ஸ்ரீ பெருமாள் தேரை விட்டு இறங்கியதும் தீர்த்தவாரி நடைபெறுவதுண்டு. பழைய நாளில் நீராட்டு விழா சாரபுஷ்கரணியில் நடைபெற்றதாம். எனவே, பெருமான் வடக்கு வீதி, வடகிழக்கு மூலையில் உள்ள சாரபுஷ்கரணிக்கு வடக்குவீதி வழியாக திரும்பவும் எழந்தருளி தீர்த்தவிழா கண்டருளி நேரே கீழ வீதியுடன் சன்னதி தெரு வழியாக கோவிலுக்கு எழுந்தருள்வார்.தற்போது குளம் நல்ல நிலையில் இல்லாததால் பழைய முறைப்படியே எழுந்தருளி கோவிலில் உள்ளசௌந்தர்ய புஷ்கரணி என்ற குளத்தில் தீர்த்த வாரி நடைபெறுகிறது. மறுநாள் சப்தாவரணவிழா தொடர்ந்து ரதஉற்சவம் புஷ்பபல்லாக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். தொடர்ந்து மூன்று நாள் ஊஞ்சல் உற்சவம் விடையாற்றி உத்ஸவமாக நடைபெறும்.
பெருமாள் மூலவர் திருமஞ்சனம் முதலான சிறப்பு விழாக்களோடு பங்குனி விழா இனிது முடியும்.ஸ்ரீ ராமநவமி அன்று தனிக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ராமபிரானுக்கு திருமஞ்சனம் திருவாராதனம் திருவீதிக்கு எழுந்தருளல் ஆகியவை நடைபெறும். இவ்வாறு திங்கள்தோறும் இக்கோயிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் புராணம் சிற்பம் சரித்திரம் ஆகிய நிலைகளில் காணத்தக்க உருவங்கள் பல உள்ளன. ஸ்ரீ பெருமான் மூலவராக நின்ற நிலையிலும், அரங்கப் பெருமான் எனக் கிடந்த நிலையிலும் கோவிந்தராஜனாக இருந்த நிலையிலும் ஆக மூவகைக் கோலங்களில் கோயில் கொண்டுள்ளார். சாலீசுக சோழன் நாகலோகம் செல்ல பிலத்தின் வழி தெரியாது திகைக்க அவரது பக்திக்கு கட்டுண்ட பரம்பொருள் கிடந்தும் இருந்தும் காட்டத் தெளியாத நிலையில் பின் மூலவராக நின்று காட்டியதாக ஐதீகம் கூறுவர். நாகராஜனுக்கு நின்றான், இருந்தான், கிடந்தான் என்ற மூவகை நிலைகளில் காட்சி கொடுத்ததாகவும் கூறுவர். அரங்கப் பெருமானது சன்னதி வாயிலின் இருபுறமும் காப்புச் செய்வோர் போன்று கரம் கூப்பிய நிலையில் இரு உருவங்கள் காணப்படுகின்றன. இவை புராணத்தில் வரும் பாத்திரங்களான கண்டன்சுண்டன் என்ற அந்தணச் சகோதர்கள் ஆவர்.
நாயக்கர் மண்டபத்தில் ஸ்ரீ பெருமாள் சன்னதிக்கு செல்லும் தேர்வாயிலின் இருபுறமும் திருவாசியுடன் கூடிய எட்டடி உயரமுள்ள இரு துவார பாலகர்களின் சுதை உருவங்கள் அரிய சிற்ப அழகு வாய்ந்தது.
திரிபங்கி நிலையில் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை மூன்று கரங்களில் தாங்கிக் கொண்டு ஒரு கையால் காவல் முத்திரை காட்டிக் கொண்டு அமைதி தவழும் முகத்துடன் பல அணிகளைப் பூண்டு நிற்கும் இப்படைப்பு உருவம் பதினேழாம் நூற்றாண்டின் கலைப் படைப்பாகும்.
ஸ்ரீ தாயார் சன்னதியின் முன் மண்டபத்தின் முகப்பில் அம்மண்டபத்தினுள் இணைந்து எழுதகம் இணைப்புக் காய்களுடன் கூடிய ஒரு சிறு நாற்கால் மண்டபம் அரிய சிற்ப வேலைப்பாட்டுடன் திருப்பணி செய்தோர் உருவங்களோடு விளங்குகிறது. நாயக்கர் மண்டபத்தின் இருபுறமும் தேர் உருளைகள் போல் கருங்கற்களால் செய்து இணைத்து அரிய சிற்ப அழகு பொலிய நிறுவியுள்ளனர். அரங்கனாதப் பெருமான் சன்னதியில் வைக்கப்பெற்றுள்ள சிங்கவேளின் சிறிய செப்புத் திருமேனி அரிய சிற்பழகு வாய்ந்தது. சீற்றமும், அருளும் இச்சிறிய உருவத்தில் காணப்படுகின்றன. நாயக்கர் மண்டபத்தில் வைக்கப் பெற்றுள்ள ஜகுல்நாயக்கர் தம்பதிகள் இராமசாமிபிள்ளை ஆகியோரின் கல்லுருவங்களும் வெளிமண்டபத் தூண்களில் செதுக்கப் பெற்றுள்ள திராட்சா பாலகுருமூர்த்தி செட்டியார் தம்பதிகளின் உருவங்களும், கோயில் பணிகள் வளர்ந்த வரலாற்றைக் காட்டி நிற்கும் சான்றுகளாகும். இங்ஙனம் புராணம், வரலாறு, சிற்பம், இலக்கியம் ஆகிய நாற்றுறையிலும் வளர்ச்சியுற்று நாற்றவம் செய்வார்க்கு இருப்பிடமாய் அமைந்த திருக்கோயில் திருநாகை அழகர் கோவில் என்று கூறினால் அது மிகையாகாது. மக்களாய்ப் பிறந்தார் அனைவரும் இத்தலத்திற்கு வந்து மூர்த்தி தலம், தீர்த்தம் இவற்றை முறையாக தரிசித்தும், ஸ்பரிசித்தும் பேறு பெற்று உய்வோமாக.